ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ செல்லும் மின்சார பைக்: விலை என்ன தெரியுமா?
50 கி.மீ செல்லும் திறன் கொண்ட ஈ-பைக்!
ஐ.ஐ.டி மெட்ராஸ்-இன்குபேட்டட் ஸ்டார்ட்-அப் நிறுவனம் Pi Beam மின்சார இரு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!
ஐ.ஐ.டி மெட்ராஸ்-இன்குபேட்டட் ஸ்டார்ட்-அப் 'பை பீம்' (incubated start-up Pi Beam) ஒரு ஸ்மார்ட்போனை விட வேகமாக சார்ஜ் செய்யக்கூடிய மின்சார இரு சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மின்சார இருச்சக்கர வாகனமானது ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ செல்லும் திறன் கொண்டது. ‘பைமோ’ ' Pi mo' என்று அழைக்கப்படும், நிலையான மற்றும் மலிவு விலையில் பயன்பாட்டு இ-பைக் தனிப்பட்ட மற்றும் வணிகத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
30ஆயிரம் ரூபாய் விலை மதிப்பு கொண்ட இந்த பைமோ மின்சார வாகனத்திற்கு லைசன்சோ, ரெஜிஸ்ட்ரேஜனோ தேவையில்லை. சாலைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, இலாவகமாக நகரும் தன்மையுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. முக்கியமான பேட்டரிகள் மற்றும் கட்டுப்படுத்திகள் உட்பட பைமோவின் தயாரிப்பு கூறுகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
இதனால் உள்ளூர் சந்தையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை முழுமையாக பிரதிபலிக்கும் தயாரிப்பாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பை பீம் அடுத்த நிதியாண்டின் (2021-22) இறுதிக்குள் 10,000 வாகனங்களை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் முன்னிலையில் பைமோ அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ்; ஐ.ஐ.டி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி, ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்கா அசோக் ஜுன்ஜுன்வாலா மற்றும் பை பீம் எலக்ட்ரிக் தலைமை நிர்வாக அதிகாரி விசாக் சசிகுமார் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
ஐ.ஐ.டி மெட்ராஸின் முன்னாள் மாணவரான சசிகுமார், இந்த மின்சார பைக்குகள் பி 2 பி பயன்பாடுகளான உணவு விநியோகம், இ-காமர்ஸ் டெலிவரி, உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். சுமார் 90 சதவீத பைக் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இது ‘மேக் இன் இந்தியா’ இன் உண்மையான உணர்வை வெளிப்படுத்துகிறது என்றார். பைமோ ஒரு மின்சார சைக்கிள் மற்றும் என்ட்ரி லெவல் மின்சார ஸ்கூட்டருக்கு இடைபட்ட நிலையில், அதிகபட்ச வேகமான 25 கி.மீ வேகத்தை வழங்குகிறது. இது அதிகபட்ச பயண வரம்பை வழங்குகிறது.
மேலும், சவாரி செய்வதற்கு ஏற்ற வசதி மற்றும் பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட இருக்கைகள் டூயல் சன்ஸ்பென்ஷன் ஆகியவை ஈர்க்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு. மேலும், பேட்டரி ஸ்வாப்பிங் ஆப்ஷன் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.
ஒரு பேட்டரியில் சார்ஜ் காலியானதும், மற்றொரு பேட்டரியை குறிப்பிட்ட இடத்திலிருந்தே மாற்றிக்கொள்ள முடியும். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலிருந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து முன்கூட்டிய 100 க்கும் மேற்பட்ட ஆரம்ப ஆர்டர்களை சில வாரங்களுக்குள்ளாகவே பை-பீம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.